ஹூதிகளின் நிலைகள் மீது 1,122 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக யெமன் அரசாங்கத்தை ஆதரிக்கும் படைகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பீரங்கி நிலைகள், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளிட்ட ஹூதிகளின் நிலைகள் இலக்கு வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யெமன் அரசாங்கப் படைகளின் பிரிகேடியர் ஜெனரல் மஜித் அப்துல்லா அல்-நுசைலி, போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள், ரொக்கெட்டுகள், பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிச் சுடும் படையினரைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
சஅதா, அல்-ஜவ்ஃப், தைஸ் மற்றும் யெமனின் கடலோரப் பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும், இதில் சுமார் 1,747 ஹூதி போராளிகள் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தப் போர்க்களத் தகவல்களை அல்ஜசீராவால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
யெமனில் ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளையும் மீண்டும் கைப்பற்றும் நோக்கில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யெமன் அரசாங்கம் பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி மூலம்: அல்ஜசீரா








