ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தாயிஸ் நகருக்கு மேற்கே இடம்பெற்ற மோதல்களில் ஒரு பகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக யெமன் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.
“எமது படைகளுக்கும் ஹூதி பயங்கரவாதப் போராளிகளுக்கும் இடையே மக்பானா மற்றும் அல்-கதா முனைகளில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜபல் ஹபாஷி மாவட்டத்தில் அமைந்துள்ள அல்-கஸான் குன்றை எமது படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்” என யெமன் ஆயுதப் படைகள் தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.
தாயிஸ் மற்றும் ஹுதைதா மாகாணங்களின் எல்லைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (03) முதல் யெமன் அரசுப் படைகளுக்கும் ஹூதி படைகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
யெமன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மேலும் சில பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு அன்சாருல்லா ஹூதிகள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாயிஸ் மற்றும் ஹுதைதா பகுதிகளைச் சுற்றி இடம்பெற்ற மோதல்களில் இரு தரப்பையும் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஹூதி தரப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.









