சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் வெளிநாட்டுப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மையம் (Sri Lanka CERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான போலி விளம்பரங்களை நம்பி, லட்சக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதன் மூலம் விசா பெற்றுக்கொள்ளவும், அங்கு சில ஆண்டுகள் பணிபுரிந்து பின்னர் குடியுரிமையைக்கூடப் பெற்றுக்கொள்ளவும் முடியும் எனக் கூறி சமூக ஊடகங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக CERT சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான விளம்பரங்களை வெளியிடும் சில மோசடியாளர்கள், தங்களைப் பிரபலமான வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் என அறிமுகப்படுத்திக்கொள்கின்றனர். பதிவுக் கட்டணம் மற்றும் முதலாம் கல்வியாண்டுக்கான கட்டணத்தைச் செலுத்தினால் பல்கலைக்கழகத்தில் இணைந்துகொள்ள முடியும் என்றும், பின்னர் பகுதிநேர வேலை மூலம் தங்குமிடம் மற்றும் உணவுக்கான செலவுகளைச் சமாளிக்கலாம் என்றும் உறுதியளிக்கின்றனர்.
மேலும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளுக்குக் கல்வி உதவித்தொகை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் போலியான வாக்குறுதிகளை வழங்குகின்றனர்.
இதனை நம்ப வைப்பதற்காக, மின்னஞ்சல்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் ஊடாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் படங்கள், காணொளிகள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். இணையத்திலிருந்து திருடப்பட்ட இவ்வாறான உள்ளடக்கங்களுடன், உண்மையான பல்கலைக்கழக ஆவணங்களைப் போன்ற போலி ஆவணங்களையும் பயன்படுத்துகின்றனர்.
தொடர்ந்து, பணத்தை வைப்புச் செய்வதற்காக வெளிநாட்டு வங்கிக் கணக்கு விபரங்களை வழங்குகின்றனர். இதனை நம்பி பதிவுக் கட்டணம் மற்றும் ஆரம்பக் கல்விக் கட்டணங்களைச் செலுத்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், பின்னர் மோசடியாளர்களால் ஏமாற்றப்படுவதாக CERT தெரிவித்துள்ளது.
எனவே, இணையத்தில் வெளியாகும் வெளிநாட்டுப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விளம்பரங்களை நம்புவதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறும், சட்டபூர்வமாகச் செயல்படும் பல்கலைக்கழகப் பிரதிநிதிகளை மட்டுமே அணுகுமாறும் இலங்கை CERT பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், சேர்க்கைக்காக வழங்கப்படும் ஆவணங்கள் மற்றும் பணம் வைப்புச் செய்யுமாறு குறிப்பிடப்படும் வங்கிக் கணக்கு விபரங்கள் தொடர்பிலும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அந்த மையம் அறிவுறுத்தியுள்ளது.







