தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் கடலில் விழுந்த இரு விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இலங்கையர்களுக்கு நீண்டகால வதிவிட விசா வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தென் கொரிய ஊடகங்களின் தகவலின்படி, 2022 ஓகஸ்ட் 12ஆம் திகதி சியோலுக்கு தெற்கே சுமார் 45 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹ்வாசாங் கடற்கரைக்கு அப்பால் மஞ்சள் கடலில் மூன்று இலங்கையர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட விமான விபத்தைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, தாங்கள் பணியாற்றிய கொரிய மீன்பிடிப் படகின் உதவியுடன் கடலில் விழுந்த இரு விமானிகளையும் மீட்டு பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.
விபத்து இடம்பெற்ற போது, குறித்த இலங்கையர்கள் தென் கொரியாவின் தொழில் அனுமதி முறைமையான EPS-இன் கீழ் வழங்கப்படும் E-9 விசாவில் பணியாற்றி வந்தனர்.
இந்த விசாவின் கீழ் வெளிநாட்டு தொழிலாளர்கள் பொதுவாக அதிகபட்சமாக 4 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் மட்டுமே தென் கொரியாவில் தங்கியிருக்க முடியும்.
எனினும், விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய அவர்களின் துணிச்சலான செயல் மற்றும் மனிதாபிமானப் பங்களிப்பை பாராட்டும் வகையில், தென் கொரிய நீதி அமைச்சு குறித்த இரு இலங்கையர்களுக்கும் நீண்டகால வதிவிட விசாவை வழங்கியுள்ளது.
இதன் மூலம், மீண்டும் மீண்டும் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமின்றி அவர்கள் நீண்டகாலமாக தென் கொரியாவில் வசிக்க முடியும்.
இந்த மீட்பு நடவடிக்கையில் பங்கேற்ற மூன்றாவது இலங்கையரும் ஏற்கனவே நீண்டகால வதிவிட விசாவைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.









