விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குவதுடன், உதவித் தொழில்நுட்பங்களை விரிவாகப் பயன்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
முறையான திட்டமிடலின்றி இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் முதலீடுகள் மற்றும் உபகரணங்கள் வீணாகும் அபாயம் உள்ளதால், முன்னோடித் திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் விரிவாகத் திட்டமிடுவதன் முக்கியத்துவம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அத்துடன், ஒவ்வொரு துறையிலும் காணப்படும் சவால்களை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் ஆரம்ப கட்டமாக, தெரிவுசெய்யப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பாடசாலைகளில் குறிப்பிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
முன்னோடித் திட்டத்தின் மூலம் கிடைக்கும் நடைமுறை அனுபவங்கள் மற்றும் எதிர்கொள்ளப்படும் சிக்கல்களை ஆராய்ந்து, அதற்கமைய தேவையான திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்டத்தில் அடையாளம் காணப்படும் கற்றல் குறைபாடுகளைக் கொண்ட மாணவர்களின் குறிப்பிட்ட தேவைகளில் கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் இத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் முறையாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்களுடன் இத்திட்டத்தை இணைத்துச் செயற்படுத்துவதுடன், ஆரம்ப கட்டத்தில் 1, 2 மற்றும் 6ஆம் தர மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்கனவே காணப்படும் பாடசாலைகள் மற்றும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அபிவிருத்திக்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும், மாணவர்களை முறையாக அடையாளம் கண்டு மதிப்பீடு செய்வதற்கான நடைமுறைகளை நிறுவுதல், கல்வியாளர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குதல் மற்றும் அணுகல் வசதிகளுக்கான தரநிலைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் ஊடாக இத்திட்டத்தை மேலும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.









