2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கைக்கு 3.16 இலட்சம் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றின் மூலம் ரூ.512.55 பில்லியன் வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான குழுவிடம் இலங்கை சுங்கத்திணைக்களம் சமர்ப்பித்த தரவுகளிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.வாகன இறக்குமதி மூலம் கிடைத்த மொத்த வரி வருவாயில், மோட்டார் வாகன இறக்குமதி மூலம் ரூ.386.73 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளது. இது மொத்த வரி வருவாயில் மிகப்பெரிய பங்காகும்.
இதேவேளை, 1,000cc-க்கும் குறைவான எஞ்சின் கொள்ளளவு கொண்ட பெற்றோல் கார்களின் இறக்குமதி, இந்தக் காலப்பகுதியில் சுங்கத்திணைக்களத்திற்கு அதிக வருவாயை ஈட்டித் தந்த பொருட்களின் வகையாக அமைந்துள்ளது.இந்த வகை வாகனங்கள் மூலம் மட்டும் ரூ.137.4 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளதுடன், இது இலங்கை சுங்கத்திணைக்களத்தின் மொத்த வருவாயில் 9.96% ஆகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையிலான வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான குழுவின் கூட்டத்தில், இலங்கை சுங்கத்திணைக்களத்தின் செயற்பாடுகள் மற்றும் வருவாய் செயல்திறன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போதே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2026 ஜூன் 30ஆம் திகதி வரையில் இலங்கை சுங்கத்திணைக்களம் ரூ.1.379 டிரில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட ரூ.1.061 டிரில்லியன் வருவாய் இலக்கை விட அதிகமாகும்.அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 130% வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் நிர்ணயிக்கப்பட்ட மாதாந்த வருவாய் இலக்கை சுங்கத்திணைக்களம் கடந்துள்ளதாகவும், 2025ஆம் ஆண்டின் இதே மாதங்களுடன் ஒப்பிடுகையில் மாதாந்த வருவாயும் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொள்கலன் பரிசோதனை நடைமுறைகள், சுங்கத்திணைக்களத்தின் செயல்திறனை மேம்படுத்த நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், வருவாய் நிர்வாகத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் குழுவில் ஆராயப்பட்டுள்ளது.









