பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொலிஸ் சேவையின் திறனை மேம்படுத்துதல் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய அமைச்சரவை ஆலோசனைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
குழுவின் தலைவர் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, சைபர் குற்றங்கள், சட்டவிரோத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள் மற்றும் இணைய மோசடிகளைக் கட்டுப்படுத்த பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சட்டவிரோத சூதாட்டம் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இணையதளங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், சைபர் குற்றங்களுடன் தொடர்புடைய சட்டவிரோத நடவடிக்கைகளில் நாட்டில் தங்கியிருந்து ஈடுபட்ட வெளிநாட்டினருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த நாடுகளின் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, சம்பந்தப்பட்ட வெளிநாட்டினரை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சைபர் குற்றப் புலனாய்வுகளுக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சட்ட அறிவைக் கொண்ட மனித வளத்தைப் பலப்படுத்தும் வகையில் மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படும் அதிகாரிகளுக்கு களப் பயிற்சி மற்றும் தேவையான வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்காக புதிய தொழில்நுட்ப அமைப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் காலத்திற்கு ஏற்ற வகையில் செயற்படக்கூடிய மத்திய அமைப்பொன்றை நிறுவுதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, கிரிப்டோகரன்சி பயன்பாடு தொடர்பான குற்றங்கள் தொடர்பில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தரவுகளைப் பகிர்ந்துகொள்வதில் காணப்படும் தடைகளை குறைப்பதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் மூலம் பெறப்படும் தகவல்களின் நிலைமை, அவற்றின் மூலம் பெறப்படும் உணர்திறன் மிக்க தகவல்கள் கசிவதைத் தடுப்பது மற்றும் சமூகப் பொலிஸ் சேவையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் விசாரணைகளை விரைவுபடுத்துதல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.
இந்தக் குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.









