வாகனங்களுக்கான வீதித் தகுதி மற்றும் பாதுகாப்புச் சான்றிதழை அறிமுகப்படுத்துவது தொடர்பில் மேலதிக கலந்துரையாடல்களும் ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு இந்தச் சான்றிதழை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வீதித் தகுதி மூலோபாயக் குழுவின் ஊடாகத் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, சான்றிதழ் வழங்கும் நடைமுறையை ஆரம்பிக்கும் திகதி, அது கட்டாயமாக்கப்படும் வாகன வகைகள், வாகனங்கள் பயணித்த மொத்தத் தூரம் உள்ளிட்ட மதிப்பீட்டு அளவுகோல்கள், சான்றிதழைப் பெறுவதற்கான நடைமுறைகள் மற்றும் அதற்கான சட்ட, நிர்வாக ஏற்பாடுகள் குறித்து மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
எனவே, இது தொடர்பான இறுதி முடிவுகளும் உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்களும் வெளியிடப்படும் வரை, சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் திகதி மற்றும் அதற்கான நிபந்தனைகள் தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் தவறான புரிதல்களையும் ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், அசௌகரியங்களுக்கும் வழிவகுக்கலாம் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இவ்விடயம் தொடர்பான சரியான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







