நாட்டில் பொருட்களை விற்பனை, சேமிப்பு, விநியோகம் அல்லது காட்சிப்படுத்தி வைத்திருக்கும் வர்த்தகர்கள், அந்தப் பொருட்களின் மூலத்தை உறுதிப்படுத்தும் பில்கள், விலைப்பட்டியல்கள் அல்லது தொடர்புடைய ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அறிவுறுத்தியுள்ளது.
CAA வெளியிட்டுள்ள பணிப்புரை இலக்கம் 83 இன் கீழ், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களிடம் உள்ள பொருட்களுக்கான எழுத்து, அச்சு அல்லது மின்னணு வடிவிலான ரசீது, பில் அல்லது விலைப்பட்டியலை வைத்திருக்க வேண்டும்.
அந்த ஆவணத்தில் விநியோகஸ்தரின் பெயர் மற்றும் முகவரி, கொள்வனவு செய்யப்பட்ட திகதி, கொள்வனவு விலை, பொருளின் வகை, அளவு மற்றும் பொருந்துமாயின் தொகுதி இலக்கம் (Batch Number) ஆகிய விபரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிப்புரை 2022 ஏப்ரல் 27ஆம் திகதி முதல் அமுலில் உள்ளது.
குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட கையிருப்பில் உள்ள பொருட்களின் மூலத்தை உறுதிப்படுத்த முடியாத வர்த்தகர்கள், அதிகாரிகளின் சோதனைகளின்போது சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என CAA தெரிவித்துள்ளது.
பொருட்களின் மூலத்தை கண்டறியும் வகையில், வர்த்தகரிடமிருந்து விநியோகஸ்தர், மொத்த விற்பனையாளர் அல்லது விநியோகஸ்தர் மற்றும் இறக்குமதியாளர் வரை விநியோகச் சங்கிலியை அதிகாரிகள் கண்காணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகளின்போது குறித்த ஆவணங்கள் பரிசோதிக்கப்படலாம். விதிமீறல்கள் உறுதிப்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் பொருட்கள் வழக்குப் பொருட்களாகக் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படலாம்.
எனவே, வர்த்தகர்கள் தங்களது விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சியங்களில் வைத்திருக்கும் அனைத்து பொருட்களுக்குமான பில்கள், விலைப்பட்டியல்கள் மற்றும் ஏனைய விநியோக ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், தேவையான சந்தர்ப்பங்களில் மின்னணு விலைப்பட்டியல்களையும் சமர்ப்பிக்கக்கூடிய வகையில் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் CAA அறிவுறுத்தியுள்ளது.









