தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் இன்று (13) குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன் தாக்கம் காரணமாக, இன்று முதல் எதிர்வரும் நாட்களில் நாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளிலும் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு மீனவர்கள், கடற்படையினர் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையான கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படலாம். எனவே, அவற்றினால் ஏற்படக்கூடிய விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.








