உலக யானைகள் தினம் – ஆகஸ்ட் 12
ஒரு காலத்தில் காடுகளின் வழியே சுதந்திரமாக நடமாடிய யானைகள் இன்று தங்களுக்கான வாழ்விடத்தையும், பாதுகாப்பான நடமாட்டப் பாதைகளையும் தேடி மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அவற்றின் வாழ்விடங்களை நாம் சுருக்கிக்கொண்டிருக்க, மனித–யானை மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
உலக யானைகள் தினம் இன்று (12) அனுஷ்டிக்கப்படுகிறது. யானைகள் எதிர்கொள்ளும் வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் மற்றும் மனித–யானை மோதல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஆபிரிக்க மற்றும் ஆசிய யானைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதுமே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
“யானைகள் நமது பாரம்பரியம் – அவற்றின் எதிர்காலம் நமது பொறுப்பு” என்பதே 2026 ஆம் ஆண்டுக்கான உலக யானைகள் தினத்தின் கருப்பொருளாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையும் யானைகளும்
இலங்கையின் இயற்கைச் சூழலுடனும் பண்பாட்டுடனும் ஆழமாக இணைந்துள்ள உயிரினங்களில் யானைகள் முக்கியமானவை. அவை வெறுமனே ஒரு வனவிலங்கு அல்ல; நாட்டின் பல்லுயிர் தன்மையின் முக்கிய அங்கமாகவும், சுற்றுச்சூழல் கட்டமைப்பின் தனித்துவமான அடையாளமாகவும் விளங்குகின்றன.
ஆனால், பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட முறையற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளால் யானைகளின் இயற்கையான நடமாட்டப் பாதைகள் மற்றும் வழித்தடங்கள் தடைப்பட்டுள்ளன. இதன் விளைவாக, உணவு மற்றும் நீரைத் தேடி யானைகள் மக்கள் குடியிருப்புகளையும் விவசாய நிலங்களையும் நோக்கி நகர வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இது இறுதியில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் பேரிழப்பை ஏற்படுத்தும் மனித–யானை மோதலாக மாறுகிறது.
அதிகரிக்கும் உயிரிழப்புகள்
இலங்கையில் கடந்த காலங்களில் சுமார் 5,000 காட்டு யானைகள் இருப்பதாகக் கருதப்பட்ட நிலையில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வனஜீவராசிகள் கணக்கெடுப்பில் 7,000க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், இந்த எண்ணிக்கை தொடர்பில் சில சிக்கல்கள் இருப்பதாக சுற்றுச்சூழல் நீதி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.அதேவேளை, எண்ணிக்கையை விட முக்கியமான கவலை யானைகளும் மனிதர்களும் தொடர்ந்து உயிரிழந்து வருவதே ஆகும்.
இலங்கையில் ஆண்டுதோறும் 400க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பதுடன், மனித–யானை மோதல்களால் சுமார் 200 மனித உயிர்களும் பலியாகி வருகின்றன.இந்த வருடத்தில் இதுவரை 180 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், 56 மனித உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இவற்றில் சுமார் 75 யானை மரணங்கள் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டினால் சுமார் 30 யானைகளும், மின்சாரத் தாக்குதலினால் 23 யானைகளும், வெடிமருந்து அல்லது ஹக்கபட்டாஸ் பயன்படுத்தப்பட்டதில் 19 யானைகளும் உயிரிழந்துள்ளன.
இந்த எண்ணிக்கைகள் வெறும் புள்ளிவிபரங்கள் அல்ல. ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் பின்னாலும் ஒரு உயிர் இருக்கிறது. ஒரு யானையின் மரணத்துக்குப் பின்னால் ஒரு காடு, ஒரு குடும்பம் அல்லது ஒரு சமூகத்தின் இழப்பும் இருக்கக்கூடும்.
மனிதர்களும் யானைகளும் – யார் யாருடைய இடத்திற்குள்?
இலங்கையின் நிலப்பரப்பில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியில் மனிதர்களும் யானைகளும் இணைந்து வாழ வேண்டிய சூழல் காணப்படுவதாக ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.
இதனால் யானைகள் மனிதர்களின் வாழ்விடங்களுக்குள் நுழைகின்றன; மறுபுறம், மனிதர்களும் யானைகளின் பாரம்பரிய வாழ்விடங்களுக்குள் தொடர்ந்து நகர்கின்றனர்.
இந்த நிலையில், “யானைகள் மனிதர்களின் பகுதிக்குள் வருகின்றன” என்று மட்டும் கூறுவது பிரச்சினைக்கான முழுமையான விளக்கமாகாது.
யானைகள் பல தலைமுறைகளாக பயன்படுத்திய நடமாட்டப் பாதைகள் இன்று வீதிகள், குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மற்றும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களால் துண்டிக்கப்பட்டுள்ளன.
அவற்றின் பாதைகள் மறைக்கப்படும்போது, அவை செல்லும் புதிய பாதைகள் பெரும்பாலும் மனிதர்களின் வாழ்விடங்களாகவே இருக்கின்றன.
மாற்றம் தேவை
மனித–யானை மோதலைத் தீர்ப்பதற்கு தற்காலிக நடவடிக்கைகள் மட்டும் போதாது. யானைகளின் இயற்கையான வாழ்விடங்கள், நீர்நிலைகள் மற்றும் நடமாட்டப் பாதைகளைப் பாதுகாப்பதுடன், திட்டமிட்ட நிலப்பயன்பாடு மற்றும் நீண்டகால பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மனித–யானை மோதலுக்குத் தீர்வு காண தமது அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள முறையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஹேமந்த விதானகே வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் ஒரு மனித உயிர்!
உலக யானைகள் தினத்தை நாம் அனுஷ்டிக்கும் இன்றைய நாளிலேயே, அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெலுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 43 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது நெல் வயலுக்குள் வந்த காட்டு யானைகளை விரட்ட முற்பட்டபோதே அவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒருபுறம் யானைகளின் பாதுகாப்பு குறித்து உலகம் பேசிக்கொண்டிருக்கிறது. மறுபுறம், அவற்றுடன் மோதலில் மனித உயிர்களும் பறிபோகின்றன.
இந்த முரண்பாடே இலங்கை எதிர்கொள்ளும் மனித–யானை மோதலின் மிகப் பெரிய சவாலாகும்.
பாதுகாப்பது யானைகளை மட்டும் அல்ல.
யானைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு விலங்கினத்தை மட்டும் பாதுகாப்பது அல்ல. அது ஒரு காடைப் பாதுகாப்பது. ஒரு சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பது. பல்லுயிர் தன்மையைப் பாதுகாப்பது.
அதேவேளை, மனிதர்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதும் அவசியம்.
யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் மோதல் இல்லாத ஒரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமெனில், யானைகளை விரட்டுவது அல்லது அவற்றைத் தடுப்பது மட்டுமே தீர்வாகாது.
அவற்றின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதும், அவற்றின் இயற்கையான பாதைகளை மீட்டெடுப்பதும், மனிதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் இணைந்த ஒரு நீண்டகால தீர்வே அவசியம்.
உலக யானைகள் தினத்தின் கருப்பொருள் நினைவூட்டுவது ஒன்றைத்தான்:
“யானைகள் நமது பாரம்பரியம் – அவற்றின் எதிர்காலம் நமது பொறுப்பு.”
அந்தப் பொறுப்பு அரசாங்கத்தின் மட்டுமல்ல. அது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு.
அப்ரா அன்சார்








