லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
அத்துடன், ரவி கருணாநாயக்க வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2015 ஜனவரி 12 முதல் 2017 மே 22 வரை நிதி அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில், அப்போதைய தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த ஷமிலா பெரேராவுடன் இணைந்து, நிதி அமைச்சின் விசேட திட்டமொன்றின் கீழ் மூன்று நபர்களை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தியதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவர்களில் இருவர் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாகவும், ஒருவர் முகாமைத்துவ உதவியாளராகவும் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த மூவரும் தேசிய லொத்தர் சபைக்கு எந்தவித சேவையும் வழங்கவில்லை எனவும், அவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தேசிய லொத்தர் சபையின் நிதியிலிருந்து வழங்கப்பட்டதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, திருத்தப்பட்ட 1994ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க லஞ்சச் சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ் ஊழல் குற்றமாகும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், ரவி கருணாநாயக்க இன்று பிற்பகல் சுமார் 1.40 மணியளவில் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.









