முத்துராஜவெல எரிபொருள் முனையத்தில் மூன்று புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை 3.04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2,796.14 மில்லியன் ரூபா பெறுமதியில் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை பெற்றோலிய மொத்த சேமிப்பு முனைய நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்தி, 15,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு தொட்டிகளும், 10,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட ஒரு தொட்டியும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்ப அனுமதி 2025 ஜூன் 2ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டிருந்தது. திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சுற்றாடல், சட்டம் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 2026 ஜூலை 20ஆம் திகதி அமைச்சரவை அறிவுறுத்தியிருந்தது.
இதன்படி, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் விதிக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகள் கொள்முதல் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச போட்டித்தன்மை கொண்ட விலைமனுக் கோரல் நடைமுறையின் கீழ் பெறப்பட்ட விலைமனுக்களில் குறைந்த விலைமனுவை சமர்ப்பித்த M/s Indo-East Engineering & Construction (Lanka) (Private) Limited மற்றும் Ceylex Engineering (Private) Limited ஆகிய நிறுவனங்களின் கூட்டுப் பங்காளித்துவத்திற்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஒப்பந்தத்தின் மொத்த பெறுமதி 3.04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2,796.14 மில்லியன் இலங்கை ரூபாவாகும். இந்தத் தொகை பெறுமதி கூட்டப்பட்ட வரியிலிருந்து (VAT) விலக்களிக்கப்பட்டதாகும்.
அப்ரா அன்சார்









