போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் சாரதிகளின் புள்ளிகளைக் குறைக்கும் முறைமையின் ஆறு மாத முன்னோடித் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சில் இன்று (28) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், குறித்த முன்னோடித் திட்டத்தை எதிர்வரும் 2027 மார்ச் 31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
நாட்டின் வீதிகளில் இடம்பெறும் வீதி விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில், போக்குவரத்து அமைச்சினால் சாரதிகளுக்கான இந்தப் புள்ளிக் குறைப்பு முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, இரண்டு வருட காலப்பகுதிக்கு சாரதிகளுக்கு குறிப்பிட்ட அளவிலான புள்ளிகள் வழங்கப்படவுள்ளதுடன், அவர்கள் வீதிகளில் மேற்கொள்ளும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஏற்ப அந்தப் புள்ளிகள் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








