பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் அனுப்பப்பட்டது போன்ற தோரணையில் ‘அபராதப் பணத்தைச் செலுத்துமாறு’ உங்களது கையடக்க தொலைபேசிக்கு ஏதேனும் குறுஞ்செய்தி (SMS) வந்தால், அது குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
பொலிஸாரால் ஒருபோதும் இவ்வாறான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதில்லை என போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் W.P.J.சேனாதீர தெரிவித்துள்ளார்.
“நீங்கள் செய்த சில போக்குவரத்து விதிமீறல்களுக்காக, ஒரு வாரத்திற்குள் உடனடியாக வழங்கப்பட்டுள்ள இணையதள இணைப்பு (web link) ஊடாகச் சென்று உரிய அபராதப் பணத்தைச் செலுத்துமாறு, பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் அனுப்பப்பட்டது போன்று உங்களது மொபைல் தொலைபேசிக்கு வாட்ஸ்அப் (WhatsApp) அல்லது வேறு ஏதேனும் வழிகளில் போலி குறுஞ்செய்திகள் வந்திருக்கலாம்.”
“ஆனால், போக்குவரத்து பிரிவினால் அத்தகைய குறுஞ்செய்திகள் எதுவும் அனுப்பப்படவில்லை. இவை முற்றிலும் போலியான செய்திகளாகும்.”
“இவ்வாறான இணையதள இணைப்புகளுக்குள் (web links) சென்று உங்களது தனிப்பட்ட விபரங்கள் அல்லது வங்கி விபரங்களை வழங்க வேண்டாம். அந்த இணைப்புகளைத் திறக்கவும் (Open) வேண்டாம்.”
“இவ்வாறான போலி குறுஞ்செய்திகள் கிடைத்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸாருக்குத் தெரியப்படுத்துங்கள். பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் இதுபோன்ற எந்தவொரு குறுஞ்செய்தியும் அனுப்பப்படுவதில்லை” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.








