புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இணையாக, பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, 2027 ஆம் ஆண்டில் 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கும், 2028 ஆம் ஆண்டில் 3 மற்றும் 7 ஆம் தரங்களுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன், 2029 ஆம் ஆண்டில் 4, 8 மற்றும் 10 ஆம் தரங்களுக்கும், 2030 ஆம் ஆண்டில் 5, 9 மற்றும் 11 ஆம் தரங்களுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
உயர்தரப் பிரிவுக்கான புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் 2031 ஆம் ஆண்டில் 12 ஆம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், அந்தப் பாடத்திட்டத்தின் கீழ் கல்வி கற்கும் மாணவர்கள் முதன்முறையாக 2033 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








