புதிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் சிலவற்றின் நிர்மாணப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் நேற்று (08) தெரிவித்துள்ளார்.
இதன்படி, குருநாகல்–தம்புள்ள அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல்–கலேவெல பகுதி நிர்மாணப் பணிகள் 2026 நவம்பர்–டிசம்பர் காலப்பகுதியில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், கஹதுடுவ–இங்கிரிய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளும் இந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்மொழியப்பட்டுள்ள கட்டுநாயக்க–சிலாபம் அதிவேக நெடுஞ்சாலைக்கான திட்டங்களைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அநுராதபுரத்தை மையமாகக் கொண்ட அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை ஆய்வு செய்வதற்கான தனியான முன்மொழிவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், கடவத்த–மீரிகம அதிவேக நெடுஞ்சாலை 2028 மே மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பொத்துஹெர–ரம்புக்கனை பகுதி 2027 ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.









