இலங்கை முதலீட்டுச் சபை (BOI), கெரவலப்பிட்டிய தொழிற்துறை வலயத்தில் 350 மெகாவாட் திறன் கொண்ட RLNG/டீசல் மூலம் இயங்கக்கூடிய கூட்டு சுழற்சி மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான Sahasdhanavi Limited நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
BOI வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தத் திட்டத்தின் மொத்த எதிர்பார்க்கப்படும் முதலீடு 291.19 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததும் 1,147 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளிலிருந்து 42 மாதங்களுக்குள் திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
1978ஆம் ஆண்டின் BOI சட்டம் இலக்கம் 4 இன் பிரிவு 17(2) இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், மூலோபாய உட்கட்டமைப்புகளில் உயர்மதிப்புடைய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துக்காட்டுவதாக BOI தெரிவித்துள்ளது.
இந்த முதலீட்டில் 90 மில்லியன் டொலர் பங்கு மூலதனமாகவும், 196.19 மில்லியன் டொலர் கடன் மூலதனமாகவும், 5 மில்லியன் டொலர் ஏனைய மூலங்களிலிருந்தும் பெறப்படவுள்ளது. இவை நிலையான சொத்துகள் மற்றும் செயற்பாட்டு மூலதனத்திற்காக பயன்படுத்தப்படவுள்ளன.
Build-Own-Operate-Transfer (BOOT) முறையில் உருவாக்கப்படவுள்ள இந்த மின் உற்பத்தி நிலையம் இரண்டு கட்டங்களாக தேசிய மின்வலையமைப்புக்கு மின்சாரத்தை வழங்கும்.
முதலாம் கட்டம்: LNG மூலம் 243 மெகாவாட் மின்சாரம் (டீசல் மூலம் 213 மெகாவாட்) உற்பத்தி செய்யும் எரிவாயு விசையாழி.
இரண்டாம் கட்டம்: LNG மூலம் 107 மெகாவாட் மின்சாரம் (டீசல் மூலம் 105 மெகாவாட்) உற்பத்தி செய்யும் நீராவி விசையாழி.
ஆரம்பத்தில் டீசலைப் பயன்படுத்தி இயங்கும் இந்த மின் நிலையம், நாட்டில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் Regasified Liquefied Natural Gas (RLNG) எரிபொருளுக்கு மாற்றப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தூய்மையான எரிபொருள் பயன்பாட்டையும், நம்பகமான மின்சார விநியோகத்தையும் மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கெரவலப்பிட்டியவில் ஏற்கனவே 350 மெகாவாட் சோபாதனவி மற்றும் 300 மெகாவாட் யுகதனவி கூட்டு சுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன.
Sahasdhanavi மின் நிலையமும் இணைந்ததும், இப்பகுதியின் மொத்த மின் உற்பத்தித் திறன் சுமார் 1,000 மெகாவாட்டாக அதிகரிக்கும். இதன் மூலம் கெரவலப்பிட்டிய இலங்கையின் முக்கிய மின் உற்பத்தி மையங்களில் ஒன்றாக மேலும் வலுப்பெறும்.
மேலும், கட்டுமானம், பொறியியல், கொள்முதல், உற்பத்தி, தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தத் திட்டம் பொருளாதார நன்மைகளை ஏற்படுத்துவதுடன், உள்ளூர் பணியாளர்களின் தொழில்நுட்ப திறன்களையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.









