இலங்கையில் பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலைகள் இன்று (21) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரித்துள்ளமையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று (21) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், கோதுமை மாவின் விலை அதிகரிப்புக் காரணமாக உணவக உரிமையாளர்கள் பல உணவுப் பொருட்களின் விலைகளைத் திருத்தியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதன்படி, அதிகரித்த உற்பத்திச் செலவுகளைக் கருத்திற்கொண்டு, சிற்றுண்டிகளின் விலைகளைச் சிறிய அளவில் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.








