தென் மற்றும் மத்திய அமெரிக்கப் பிராந்தியங்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பனாமாவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி நேற்று (9) இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பிராந்தியத்தின் பல நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கொலம்பியா, ஈக்வடார், நிகரகுவா, கோஸ்டாரிக்கா மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளும் சுனாமி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, பனாமா நகரத்திலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில், மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில், 12.6 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 80க்கும் மேற்பட்ட தொடர் அதிர்வுகள் பதிவாகியுள்ளதாகவும், அச்சமடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புத் தேடி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பனாமா நகரத்திற்குத் தென்மேற்கே அமைந்துள்ள பெனொனோம் நகரில் ஹோட்டல் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததுடன், பல கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.
எனினும், இதுவரை உயிரிழப்புகளோ அல்லது பாரிய காயங்களோ பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, நாட்டின் ஆறு மாகாணங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அவசரநிலைக்கு மத்தியிலும், பனாமா கால்வாய், கோப்ரே பனாமா செம்புச் சுரங்கம் மற்றும் டோகுமென் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பொருளாதார மையங்கள் வழமைபோன்று இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த அனர்த்தத்தினால் பனாமாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1 முதல் 10 சதவீதம் வரையிலான பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.








