இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நெற்செய்கைக்கு மேலதிகமாக மேலும் 12 உணவுப் பயிர்களுக்கும் விவசாய மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் எந்தவொரு அரசாங்கமும் வழங்காத அளவிலான பெருந்தொகை நிதியை தற்போதைய அரசாங்கம் விவசாயிகளுக்கான பயிர்ச்செய்கை மானியமாக வழங்கும் நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“விவசாயிகளுக்கு வழங்கப்படுவது உண்மையில் பயிர்ச்செய்கை மானியமாகும். இந்த நிதியை உரம் கொள்வனவு செய்வதற்கோ, சேதங்களை ஈடுசெய்வதற்கோ அல்லது நிலத்தைப் பண்படுத்துவதற்கோ எனத் தமது எந்தவொரு தேவைக்கும் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது வழங்கப்பட்ட மானியத் தொகையைத் தற்போது இருமடங்காக அதிகரித்துள்ளோம். நெற்செய்கைக்கு மேலதிகமாக மேலும் 12 பயிர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இதன்படி, நெல் உள்ளிட்ட மொத்தம் 13 பயிர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நெற்செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களில் ஏனைய பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும், நெற்செய்கைக்கு வழங்கப்படும் அதே அளவிலான மானியம் வரலாற்றில் முதன்முறையாக வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த கால அரசாங்கங்கள் வழங்காத அளவிலான பெருந்தொகை நிதியை விவசாயிகளுக்கான பயிர்ச்செய்கை மானியமாக ஒதுக்கி, அதனை வழங்கும் நடவடிக்கைகளைத் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.








