அப்ரா அன்சார்
கொழும்பு– இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றத் தொடங்கியபோது, அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 77 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபை மண்டபத்திலிருந்து வெளியேறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்கு, ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், ஓசியானியா உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த நாடுகளின் பிரதிநிதிகள் இந்த வெளிநடப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியேறிய அரபு நாடுகளின் பட்டியலில் சிரியா, பாலஸ்தீனம், ஜோர்தான், லெபனான், ஈராக், சவூதி அரேபியா, கட்டார், குவைத், ஓமான், யேமன், எகிப்து, சூடான், துனிசியா, அல்ஜீரியா, லிபியா, மொரிட்டானியா, சோமாலியா மற்றும் கொமரோஸ் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஆசியா மற்றும் துருக்கியைச் சேர்ந்த துருக்கி, ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, மலேசியா, புரூனை, மாலத்தீவு, மியன்மார், வட கொரியா, துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் சபையிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தென்னாபிரிக்கா உள்ளிட்ட 20 ஆபிரிக்க நாடுகளும், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தைச் சேர்ந்த 17 நாடுகளும் இந்த வெளிநடப்பில் இணைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மாசிடோனியா, சான் மரினோ, ஸ்லோவேனியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட ஆறு ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த துவாலு மற்றும் டொங்கா ஆகிய நாடுகளும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச அளவில் கடுமையான விமர்சனங்கள் நிலவி வரும் நிலையில் இந்த வெளிநடப்பு இடம்பெற்றுள்ளது.
எனினும், நெதன்யாகு தனது உரையில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.
“நாங்கள் இன்னும் முடிக்கவில்லை” எனத் தெரிவித்த அவர், ஹமாஸின் எஞ்சிய உறுப்பினர்கள் காஸா நகரில் இருப்பதாகவும், இஸ்ரேல் தனது நடவடிக்கையை “முடிக்க வேண்டும்” என்றும் கூறினார்.
மேலும், காஸாவில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் பணயக்கைதிகளை நேரடியாகக் குறிப்பிட்டுப் பேசிய நெதன்யாகு, முதலில் ஹீப்ரு மொழியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் அவர்களுக்கு செய்தியொன்றை வெளியிட்டார்.
நெதன்யாகுவின் உரையின்போது இடம்பெற்ற இந்தப் பெருமளவிலான வெளிநடப்பு, காஸா மோதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நிலவும் ஆழமான இராஜதந்திரப் பிளவுகளை வெளிப்படுத்தியுள்ளது.








