நீண்டகால ஊடகவியலாளரும், நியூஸ் 1st ஊடகத்தின் அனுராதபுர செய்தியாளருமான இஃபாம் மொஹமட் தனது 45ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், மரணத்திற்கான உத்தியோகபூர்வ காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
அனுராதபுரத்தில் பல ஆண்டுகளாக ஊடகவியலாளராகப் பணியாற்றிய அவர், நியூஸ் 1st உள்ளிட்ட பல்வேறு ஊடக நிறுவனங்களுக்காக பிராந்திய செய்திகளைச் சேகரித்து வழங்கியுள்ளார்.
அவரது மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள நியூஸ் 1st ஊடகம், கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் மிக்க ஊடகவியலாளராகவும், ஊடக சுதந்திரத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவராகவும் அவரை நினைவுகூர்ந்துள்ளது.
இதேவேளை, இஃபாம் மொஹமட்டின் தாயார் உயிரிழந்த மறுநாளே அவரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாயாரின் மறைவைத் தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
அனுராதபுரத்தின் பிராந்திய செய்தி அறிக்கையிடலில் பல ஆண்டுகளாகப் பங்களிப்புச் செய்த அனுபவமிக்க ஊடகவியலாளரின் இழப்பு ஊடகத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







