மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் தீ விபத்துகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும் வகையில், விரைவில் தனி வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படுமென பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுலை, தேவாலேகம கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ரில்ஹேன தோட்டத்தின் பாலுகம்பல பிரிவில் கடந்த 15ஆம் திகதி இரவு 7.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று தோட்டக் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை கடந்த 18ஆம் திகதி நேரில் சென்று பார்வையிட்ட பிரதி அமைச்சர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது, குறித்த தீ விபத்தில் ஒரு வீடு முழுமையாகவும் ஏனைய இரண்டு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தீயினால் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கும் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகளை குறித்த பகுதிக்கு அழைத்து ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும், அந்த ஆய்வறிக்கை கிடைத்த பின்னர் வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன்போது, தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைநிறைகளையும் பிரதி அமைச்சர் கேட்டறிந்துகொண்டார்.








