புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சைச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில், 137 வகையான புற்றுநோய் மருந்துகளின் விலைகளை 70 சதவீதம் வரை குறைப்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA), தெரிவு செய்யப்பட்ட மருந்துகளுக்கான வர்த்தக இலாப வரம்பை 30 சதவீதமாகக் கட்டுப்படுத்தத் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, புதிய விலை ஒழுங்குமுறைகள் எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
இந்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சின் தகவலின்படி, இந்நடவடிக்கையானது புற்றுநோயாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் எதிர்கொள்ளும் நிதிச்சுமையைப் பெருமளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கருப்பை முட்டைப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வகையான புற்றுநோய்களுக்கான மருந்துகள் இந்தப் புதிய விலை ஒழுங்குமுறைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பெம்ப்ரோலிசுமாப் (Pembrolizumab), பெவாசிசுமாப் (Bevacizumab), துர்வாலுமாப் (Durvalumab) மற்றும் ஒசிமெர்டினிப் (Osimertinib) உள்ளிட்ட பரவலாகப் பயன்படுத்தப்படும் புற்றுநோய் மருந்துகளும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்ட ஏழு நாட்களுக்குள் திருத்தப்பட்ட மருந்து விலைகளைச் சமர்ப்பிக்குமாறு மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் நவம்பர் 9ஆம் திகதி முதல் குறைக்கப்பட்ட விலைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், தற்போதுள்ள உற்பத்தி மற்றும் விநியோக மட்டங்களைத் தொடர்ந்து பேணுமாறும் மருந்து நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கு முன்னர், கடந்த 2019ஆம் ஆண்டிலும் இந்தியா இதேபோன்ற நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. அப்போது 42 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கான வர்த்தக இலாப வரம்பு கட்டுப்படுத்தப்பட்டதுடன், 526 வர்த்தகப் பெயர்களின் கீழ் விற்பனை செய்யப்பட்ட மருந்துகளின் விலைகள் 90 சதவீதம் வரை குறைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மருந்து விநியோகம் மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளில் அதிகப்படியான இலாபம் ஈட்டப்படுவதைக் கட்டுப்படுத்துவதுடன், புற்றுநோய் சிகிச்சையைப் பொதுமக்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை மேம்படுத்துவதும் இந்தப் புதிய நடவடிக்கையின் நோக்கமாகும்.
எவ்வாறாயினும், ஒவ்வொரு மருந்தினதும் தற்போதைய விலை நிர்ணயக் கட்டமைப்பைப் பொறுத்து, விலைக் குறைப்பின் அளவு மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








