திருகோணமலை வைத்தியசாலையில் 55 வயதுடைய நோயாளி ஒருவரிடமிருந்து 3.1 கிலோகிராம் எடையுடைய பாரிய சிறுநீர்ப்பைக் கல் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட உலகின் மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கற்களில் ஒன்றாக இது இருக்கக்கூடும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட குறித்த நோயாளி, வயிற்றுப் பகுதியில் கட்டி போன்ற ஒன்று இருப்பதாக ஆரம்ப பரிசோதனைகளில் தெரியவந்ததைத் தொடர்ந்து, சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனைகளில், வயிற்றுப் பகுதியில் காணப்பட்ட குறித்த கட்டி உண்மையில் மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல் என்பது கண்டறியப்பட்டது என சத்திரசிகிச்சைக் குழுவில் இடம்பெற்ற வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நிபுணத்துவ வைத்தியர்கள் அடங்கிய குழுவினரால் நோயாளி சத்திரசிகிச்சைக்கு தயார்படுத்தப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அகற்றப்பட்ட சிறுநீர்ப்பைக் கல் 3.1 கிலோகிராம் எடையுடையதுடன், 14 முதல் 19 சென்டிமீற்றர் நீளத்தைக் கொண்டிருந்ததாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட உலகின் மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல் என்ற வகையில், இந்தக் கல் கின்னஸ் உலக சாதனைக்கு தகுதி பெறக்கூடும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். எனினும், இது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட நிபுணத்துவ வைத்தியர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருக்கு வைத்தியசாலைப் பணிப்பாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேவையான வசதிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஏனைய ஆதரவுகளை வழங்குவதே வைத்தியசாலை நிர்வாகத்தின் முக்கிய பங்களிப்பாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.









