கொழும்பு: உமா ஓயா கீழ்நிலைப் பள்ளத்தாக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிரிந்தி ஓயா பள்ளத்தாக்கில் நிர்மாணிக்கப்பட்ட குடா ஓயா நீர்த்தேக்கம் நேற்று (01) பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
சுமார் 22.017 பில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 5,000 குடும்பங்கள் பயனடையவுள்ளதுடன், மொனராகலை மாவட்டத்தில் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் வசதிகளும் வலுப்படுத்தப்படவுள்ளன.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட பின்னர் வெளியேற்றப்படும் நீரை கிரிந்தி ஓயா ஆற்றுப் படுகைக்கு திருப்பி விவசாய மற்றும் குடிநீர் தேவைகளுக்குப் பயன்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
அலிகோட்ட ஆர, ஹந்தபானகல மற்றும் குடா ஓயா ஆகிய மூன்று பிரதான நீர்த்தேக்கங்களுடன் இணைக்கப்பட்ட நீர்ப்பாசன வலையமைப்பின் ஊடாக நீர் விநியோகிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் யால மற்றும் மஹா ஆகிய இரு பெரும் பயிர்ச்செய்கை பருவங்களிலும் சுமார் 21,038 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி வழங்கப்படவுள்ளது.
மேலும், குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் கனமீற்றர் நீர் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெல்லவாய மற்றும் தனமல்வில பகுதிகளில் நீர்வரத்து கால்வாய் கட்டமைப்புகளை நிர்மாணித்தல் மற்றும் மேம்படுத்துதல், 58 கிராமிய குளங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நீர்ப்பாசன வலையமைப்புகளை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளும் இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தொழிற்துறை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், பிரதான நீர்த்தேக்கங்களில் மீனவர் சங்கங்களை நிறுவி நன்னீர் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதும் திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும்.








