தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளுமாறு தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சின் செயலாளரால் இன்று (06) எழுத்துமூலம் அறிவிக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், எரிபொருள் விற்பனையில் நட்டம் ஏற்படுவதாகக் கூறி, நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் தமது விநியோக நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்துவதுடன், குறைந்தபட்ச எரிபொருள் இருப்பைப் பேணுமாறும் அறிவுறுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போதைய எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அதிகளவில் எரிபொருளை விநியோகிக்க தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிலவும் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் நாளை (07) வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதனிடையே, நிலவும் எரிபொருள் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக பெற்றோலிய விநியோகத்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.





