சிறையில் உள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி முன்னெடுக்கப்படும் நடைபயணப் பேரணிக்கு ஆதரவளித்த ஒருவர் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்திற்கும் நடைபயணப் பேரணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், தனிப்பட்ட தேவைக்காக லொறியில் பயணித்த ஒருவருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும் இடையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தொடர்பான முரண்பாடே தாக்குதலில் முடிவடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று (14) யக்கல, வீதியவத்தை பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறையில் உள்ள தேரர் ஒருவரின் விடுதலையைக் கோரி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்படும் நடைபயணப் பேரணிக்கு ஆதரவளித்த ஒருவர் மீது சிலர் தலைக்கவசத்தால் தாக்குதல் நடத்தியதாக தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் வெளியிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில், வீரகுல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்படி, தாக்குதலுக்குள்ளான நபர் நடைபயணப் பேரணியுடன் தொடர்புடையவர் அல்ல என்பது தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வத்துபிட்டிவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், அவரிடம் பொலிஸார் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளனர்.
இதன்போது, வீதியவத்தையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின்போது தமக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும், அது முற்றியதன் காரணமாகத் தாம் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் இடம்பெற்றபோது தேரர் ஒருவர் அங்கு வந்து அது தொடர்பில் விசாரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை நடைபயணப் பேரணியுடன் தொடர்புபடுத்தி, பேரணிக்கு ஆதரவளித்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் காணொளி மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய, குறித்த காணொளி தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து, பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவோர் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, சமூக வலைத்தளங்களில் பரவும் இவ்வாறான காணொளிகள் மற்றும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் அவற்றைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகுல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








