சித்த ரன்கடு பத்தினி தேவாலயத்தின் தீர்த்த உற்சவ வருடாந்த பெரஹெரா காரணமாக, இன்று (16) கடுவெல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேவாலயத்தின் பெரஹெரா இன்று காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை வீதி உலா வரவுள்ளது.
தேவாலயத்திற்கு அருகில் ஆரம்பமாகும் பெரஹெரா, 143 அவிசாவளை–கொழும்பு பேருந்து வீதி வழியாக கடுவெல ராஜசிங்க பாலத்தை கடந்து பண்டாரவத்தை மற்றும் பியகம பகுதிகளை சென்றடையும். தீர்த்த உற்சவ சடங்குகள் நிறைவடைந்த பின்னர், அதே வீதி வழியாக கடுவெல சந்தியை கடந்து மீண்டும் தேவாலயத்தை சென்றடைய உள்ளது.
இதனால், பெரஹெரா இடம்பெறும் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்று வழி:
143 அவிசாவளை–கொழும்பு பேருந்து வீதியில் வெலே சந்தி பகுதியில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், 697 பேருந்து வீதி வழியாக பட்டியவத்தை வீதியைப் பயன்படுத்தி 177 கடுவெல–கொள்ளுப்பிட்டி பேருந்து வீதியை அடைய முடியும்.
அங்கிருந்து மாலபே திசையை நோக்கிய ராஜசிங்க மாவத்தை வழியாக மீண்டும் 143 அவிசாவளை–கொழும்பு பேருந்து வீதியை அடைந்து பயணிக்க முடியும்.








