செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினர் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு WhatsApp தொழில்நுட்பத்தின் ஊடாக வீடியோ வழியில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், நிரந்தர குறுஞ்செய்தி இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் வரை, செவிப்புலன் வலுவிழந்தவர்கள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றி தமது முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.
முறைப்பாடு செய்வதற்கான நடைமுறை:
- 011-2809980 என்ற தொலைபேசி இலக்கத்தை கைப்பேசியில் சேமித்துக்கொள்ளவும்.
- WhatsApp மூலம் குறித்த இலக்கத்திற்கு Audio Call ஒன்றை மேற்கொள்ளவும்.
- அழைப்பு தானாகத் துண்டிக்கப்பட்ட பின்னர், கைப்பேசிக்கு ஒரு விசேட Link கிடைக்கும்.
- அந்த Link-ஐ பயன்படுத்தி மீண்டும் உள்நுழையவும்.
- தோன்றும் “Join Browser” என்பதை Click செய்து, பின்னர் “Join Meeting” என்பதைத் தெரிவுசெய்யவும்.
- இதன் பின்னர் Video Call மூலம் பொலிஸாருடன் இணைந்து, இலகுவாக முறைப்பாட்டைச் சமர்ப்பிக்க முடியும்.
செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்திற்கொண்டு இந்த விசேட சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.









