முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பாடசாலைச் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான செய்தியும், அது தொடர்பில் தனது பிள்ளைகள் எழுப்பிய கேள்விகளும், இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) உருவாக்கப்பட்ட செயற்பாட்டைத் தூண்டிய காரணிகளில் ஒன்றாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.
சிறுவர் கொடுமைக்கு எதிரான அறக்கட்டளையின் தலைவரான வைத்தியர் துஷ் விக்ரமநாயக்கவுடனான நேர்காணலில் கருத்து தெரிவித்த அவர், தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான கவலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டு, பின்னர் சட்டரீதியான அதிகாரசபை உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வாரத்தில் ஒரு நாளை தனது இரு பிள்ளைகளுடன் செலவிடுவதற்கு ஒதுக்கியிருந்ததாக தெரிவித்த சந்திரிகா குமாரதுங்க, கொழும்பின் முன்னணி பாடசாலையொன்றைச் சேர்ந்த சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைச் செய்தியொன்றை வாசித்த பின்னர் தனது பிள்ளைகள் தன்னிடம் அது தொடர்பில் கேள்வி எழுப்பியதாக நினைவுகூர்ந்தார்.
பாடசாலை வேன் சாரதி ஒருவர் சிறுமிகளை ஏமாற்றி கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், அதனை காணொளியாகப் பதிவு செய்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தனது பிள்ளைகள் தன்னிடம் கேள்வி எழுப்பியதுடன், தங்களது தாயின் அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்போதும் இவ்வாறான துஷ்பிரயோகங்களை ஏன் தடுக்க முடியவில்லை எனக் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் மேலும் வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்ததாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதன் பின்னர் சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனை மற்றும் தற்கொலை உள்ளிட்ட சிறுவர்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக செயலணிகள் அமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் செயலணிகளில் அரசியல்வாதிகள் இடம்பெறவில்லை என்றும், சம்பந்தப்பட்ட துறைகளின் நிபுணர்கள், அரச அதிகாரிகள் மற்றும் அந்தத் துறைகளில் பணியாற்றியவர்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியில், சிறுவர் துஷ்பிரயோகத்தை கையாள்வதற்கு போதுமான அதிகாரங்களைக் கொண்ட விசேட நிறுவனமொன்று இலங்கைக்கு அவசியம் என்ற முடிவுக்கு வந்ததாக சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அதிகாரபூர்வ தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பதிவுகளின்படி, 1996 டிசம்பரில் சந்திரிகா குமாரதுங்கவினால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டது. அதன் முக்கிய பரிந்துரைகளில் ஒன்றாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவது முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலம் 1998 ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதே ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
1998ஆம் ஆண்டின் 50ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்த அதிகாரசபை, சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பது, பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பாதுகாப்பது, துஷ்பிரயோகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்காணிப்பது மற்றும் சட்ட, நிர்வாக சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பது உள்ளிட்ட பொறுப்புகளைக் கொண்டுள்ளது.
அதிகாரசபையை நிறுவுவதற்கு தனது அரசாங்கம் குறிப்பிடத்தக்க அரசியல் எதிர்ப்பை எதிர்கொண்டதாக முன்வைக்கப்படும் கருத்தையும் சந்திரிகா குமாரதுங்க நிராகரித்துள்ளார்.
அதற்குப் பதிலாக, இந்த விடயத்தைப் புரிந்துகொண்டு பணியாற்றக்கூடிய நபர்களை அடையாளம் காண்பதே முக்கிய சவாலாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக சிவில் சமூகத்தினர் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்தவர்களும் அரச அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்காக இணைத்துக்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான துஷ்பிரயோகங்களுக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், பெண் பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய விசேட பிரிவுகளை உருவாக்கியமை உள்ளிட்ட நடவடிக்கைகளையும், துஷ்பிரயோகங்களைப் பதிவுசெய்து முறைப்பாடு செய்யுமாறு மக்களை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில், அரசாங்கம் விசேட பொறிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே சிவில் சமூக அமைப்புகள் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முதலாவது தலைவராக பேராசிரியர் ஹரேந்திர டி சில்வா மற்றும் அதன் ஆளும் சபை நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1999 ஜூன் 4ஆம் திகதி அதிகாரசபை உத்தியோகபூர்வமாக செயற்படத் தொடங்கியது.








