ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
விசாரணைகளின்போது, முறைசாரா நடைமுறைகளைப் பின்பற்றி தெரிவுசெய்யப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சந்தேகநபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த நிறுவனங்களுக்கு பொஸ்பேட் ஏற்றுமதிக்கான உரிமங்களைப் பெற்றுக்கொள்ள உதவியதற்காக 81 இலட்சம் ரூபாய் இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டு, அதனை தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.








