“வனஸ்பதி” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் 20 காடுகள் நாளை (26) பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்திகே தலைமையில் நுவரெலியா சததென்ன வனக் கல்லூரியில் இதற்கான நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதன்படி, நுவரெலியா, கேகாலை, அம்பாறை, பதுளை, வவுனியா மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்படவுள்ளன.
குறித்த 20 காடுகளின் மொத்த நிலப்பரப்பு சுமார் 9,538 ஹெக்டேயர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் சுற்றாடல் அமைச்சு, வனப் பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து இதுவரை 93 காடுகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானியில் அறிவித்துள்ளது.
நாளை அறிவிக்கப்படவுள்ள 20 வனப்பகுதிகளையும் சேர்த்து, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் மொத்த நிலப்பரப்பு சுமார் 65,000 ஹெக்டேயராக அதிகரிக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.




