சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தம்மாம் நகரின் கிங் பஹத் சர்வதேச விமான நிலையம் மீது நேற்று (21) மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், எட்டு பேர் காயமடைந்துள்ளதாக சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், விமான நிலையத்திற்கு ஏற்பட்ட சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், ஈரானின் ஆதரவைப் பெற்ற யெமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அண்மைய நாட்களாக சவூதி அரேபியாவின் விமான நிலையங்களைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ஏனைய எறிபொருட்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக, சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களில் அமைந்துள்ள விமான நிலையங்களைத் தவிர, ஏனைய விமான நிலையங்கள் தமது தாக்குதல் வரம்புக்குள் இருப்பதாகக் குறிப்பிட்ட ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அவற்றுக்குப் பயணிப்பதைத் தவிர்க்குமாறு முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
யெமனில் சவூதி ஆதரவு பெற்ற அரச படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, யெமன் அரச படைகளுக்கு ஆதரவளிக்கும் சவூதி அரேபியாவைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், சவூதி அரேபியாவில் அதிகரித்து வரும் பதற்ற நிலைமையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள அமெரிக்கத் தூதரக ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.







