சவூதியின் East-West எண்ணெய்க் குழாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் ஏவுதளத்தை ஈராக் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து கைப்பற்றியுள்ளனர்.
இந்தத் தாக்குதலால் சவூதியின் முக்கிய எண்ணெய்க் குழாய் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்தது.
ஈராக் பாதுகாப்பு ஊடகப் பிரிவின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சாத் மான், உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் அடங்கிய சிறப்புப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் ட்ரோன் ஏவுதளத்தைக் கண்டறிந்து, அங்கிருந்த உபகரணங்களை கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பான உளவுத்தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக சவூதி அதிகாரிகளுடன் ஈராக் அரசு நேரடித் தொடர்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தடுப்பு இறையாண்மை” என்ற கொள்கையை ஈராக் கடைப்பிடிப்பதாகக் கூறிய சாத் மான், தமது நாட்டின் எல்லைக்குள் தாக்குதல்கள் நடைபெறுவதைத் தடுப்பதுடன், வேறு எந்த நாட்டுக்கும் எதிரான தாக்குதல்களை நடத்த ஈராக் நிலப்பரப்பு பயன்படுத்தப்படுவதையும், ஈராக் ஒரு பினாமிப் போரில் ஈடுபடுத்தப்படுவதையும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.








