குஷ் போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டுவந்த விமானப் பயணி ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குறித்த போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவந்து, விமான நிலையத்தின் வர்த்தகர்களுக்கான பசுமை வழி ஊடாக வெளியேற்ற முயன்றபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் மாத்தறை, வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய வர்த்தகர் ஒருவர் ஆவார்.
சந்தேக நபர் 12.09.2026 மாலையில் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளார்.
இதன்போது அவர் 668 கிராம் குஷ் போதைப்பொருளை 3 பொதிகளாகத் தயாரித்து, தான் அணிந்திருந்த காற்சட்டையில் மறைத்து நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்.
இந்தப் போதைப்பொருள் தொகையின் மதிப்பு 66 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் அவர் கொண்டுவந்த குஷ் போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.







