யெமனில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ஹூதிகள் சவுதி அரேபிய கப்பல் போக்குவரத்துக்கு முற்றுகை அறிவித்ததைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
செப்டெம்பர் மாத தொடக்கம் முதல், ரியாத், அல்-கர்ஜ், மக்கா, ஜித்தா, தாயிஃப், கமிஸ் முஷைத், அப்ஹா, ஜிசான், அல்-உலா, யன்பு மற்றும் ஷரூரா உள்ளிட்ட குறைந்தது 11 நகரங்கள் மற்றும் ஆளுநரகங்களுக்கு சவுதி சிவில் பாதுகாப்புப் பிரிவு அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
செப்டெம்பர் 9ஆம் திகதி முதல் குறைந்தது 24 உள்ளூர் அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அப்ஹா மற்றும் கமிஸ் முஷைத் பகுதிகளுக்கு தலா குறைந்தது நான்கு தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், தாயிஃப் பகுதிக்கு குறைந்தது மூன்று தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜித்தா, அல்-உலா, யன்பு, ரியாத் மற்றும் அல்-கர்ஜ் பகுதிகளுக்கும் தலா குறைந்தது இரண்டு தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறும், ஜன்னல்கள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறும், கூட்டமாக கூடுவதையும் சம்பவங்களை காணொளியாக பதிவு செய்வதையும் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
யெமனில் சவுதி மேற்கொள்ளும் வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் தமது தாக்குதல்கள் தொடரும் என ஹூதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார். பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஹூதிகள் மறுத்துள்ளதுடன், மக்கா புனித நகரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக சவுதி முன்வைத்த குற்றச்சாட்டையும் நிராகரித்துள்ளனர்.
ஹூதிகளின் தாக்குதல்களில் சவுதி அரேபியாவின் நகரங்கள், இராணுவத் தளங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் இடம்பெற்ற முதல் பெரிய தாக்குதலில் 73 பொதுமக்கள் காயமடைந்ததுடன், கமிஸ் முஷைத், அப்ஹா மற்றும் தாயிஃப் மீதான அடுத்தடுத்த தாக்குதல்களில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, இடைமறிக்கப்பட்ட ட்ரோனின் சிதைவுகள் விழுந்ததில் தாயிஃப் பகுதியில் யெமன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹூதிகளின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு “பொறுப்புடனும் உறுதியுடனும்” பதிலளிப்பதாக சவுதி தலைமையிலான கூட்டணியின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் இறையாண்மையைப் பாதுகாக்க கூட்டணி நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.








