மலேசிய சர்வதேச திரைப்பட விருது விழாவில் விருதுகளை வென்ற சிரேஷ்ட நடிகர் மகேந்திர பெரேரா மற்றும் நடிகர் பிரியந்த சிறிகுமார ஆகியோர் 26.07.2026 பிற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
9 ஆவது கோல்டன் குளோப் விருது விழா – 2026 (9th Golden Globe Award – 2026) என நடைபெற்ற மலேசிய சர்வதேச திரைப்பட விருது விழாவில், “ரிவர்ஸ்டன்” (Riverston) திரைப்படத்தின் நடிப்புக்காக மகேந்திர பெரேரா சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
அதே திரைப்படத்தின் நடிப்புக்காக பிரியந்த சிறிகுமார சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 4.01 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான UL 315 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்களை வரவேற்பதற்காக “ரிவர்ஸ்டன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் நிமந்தி போரகெ உள்ளிட்ட திரையுலகக் கலைஞர்கள் பலர் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வருகை தந்திருந்ததாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்ற திரைப்படப் படைப்புகள் மட்டுமே இந்த விருது விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.









