சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) கலைப்பதற்கும், அதன் நிறுவன ஒப்பந்தமான ரோம் சாசனத்திலிருந்து விலகுவதற்கும் ஆதரவளிக்குமாறு தனது நேட்டோ நட்பு நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
நேட்டோ அமைப்பின் பிரதிநிதிகளுக்கு அமெரிக்கா அண்மையில் அனுப்பிய ஆவணத்தில், ரோம் சாசனத்திலிருந்து விலகுவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கட்டமைப்பை “திட்டமிட்டு கலைக்க” அமெரிக்கா விரும்புவதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தங்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை நேட்டோ நாடுகள் ஆராய வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் வரம்பு மீறல்கள் தொடர்பில் பகிரங்கமாக விமர்சிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கோரியுள்ளது.
அத்துடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து வகையான உதவிகள் மற்றும் ஆதரவுகளையும் உடனடியாக நிறுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் பிரஸ்ஸல்ஸில் நேட்டோவின் 32 தூதுவர்கள் பங்கேற்ற மூடிய அறைக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோவுக்கான அமெரிக்க தூதுவர் மேத்யூ விட்டேக்கர், “அமெரிக்காவின் பக்கம் யார் நிற்கிறார்கள் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கவனிப்போம்” என நட்பு நாடுகளை எச்சரிக்கும் வகையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனினும், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை ஏற்க மறுத்து, கூட்டத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன.
நேட்டோ ஒரு தனி அமைப்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினராக இல்லை. எனினும், அமெரிக்கா மற்றும் துருக்கியைத் தவிர ஏனைய அனைத்து நேட்டோ உறுப்பு நாடுகளும் ICC-யின் உறுப்பினர்களாக உள்ளன.
அமெரிக்காவின் இறையாண்மையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தலையிடுவதாகக் குற்றம்சாட்டி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவர் டோமோகோ அகானே உள்ளிட்ட பல சிரேஷ்ட அதிகாரிகள் மீது அமெரிக்கா கடந்த மாதம் தடைகளையும் விதித்திருந்தது.
போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக 2002ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை ICC விசாரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் நீதிமன்றத்துக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்தது.
ஈரான் மீதான போர் மற்றும் கிரீன்லாந்து விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏற்கனவே பதற்றமடைந்துள்ள நிலையில், ICC தொடர்பான இந்த விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








