களுவாஞ்சிகுடி–கல்முனை பிரதான வீதியில் கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
நேற்று (22) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 18 வயதுடைய கிஷோன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆறு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதுடைய கதிசன் என்ற சிறுவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து இடம்பெற்றபோது, நான்கு இளைஞர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மட்டக்களப்பு–கோட்டைக்கல்லாறு வீதியில் பயணித்துள்ளனர்.
கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, ஒரு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியைக் கடப்பதற்காக ஓரத்தில் நின்றுகொண்டிருந்த மூன்று மாணவர்கள் மீது மோதியுள்ளது.
இந்த மாணவர்கள் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்கள் எனவும், மேலதிக வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்களில் மூன்று சிறுமிகளும் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காயமடைந்த ஒரு சிறுமியின் ஒரு கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









