கொழும்பு மரதன் 2026 போட்டியில் 5,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
50ஆவது தேசிய விளையாட்டு விழாவுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சர்வதேச மரதன் போட்டி, எதிர்வரும் செப்டெம்பர் 13ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப்போட்டியின் பிரதான பிரிவுகளுக்காக இதுவரை 1,200 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதன்படி, 42 கிலோமீற்றர் முழு மரதன் போட்டியில் 405 பேரும், 21 கிலோமீற்றர் அரை மரதன் போட்டியில் 398 பேரும், 10 கிலோமீற்றர் போட்டியில் 389 பேரும் பதிவு செய்துள்ளனர்.
மேலும், 5 கிலோமீற்றர் ‘Fun Run’ போட்டியில் 4,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இம்முறை நடைபெறும் கொழும்பு மரதன் போட்டி வரலாற்றில் மிகப்பெரிய போட்டிகளில் ஒன்றாக அமையவுள்ளது.
இப்போட்டிக்கு சர்வதேச ரீதியிலும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதுடன், 25 நாடுகளைச் சேர்ந்த 130 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். கென்யா மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர்களும் இலங்கை வீரர்களுடன் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
முழு மரதன் போட்டிக்கான பாதை காலி முகத்திடலில் ஆரம்பமாகி, கொள்ளுப்பிட்டி, மரைன் டிரைவ் மற்றும் தெஹிவளை ஊடாக இரண்டு சுற்றுகளாக அமைக்கப்பட்டுள்ளது. அரை மரதன் போட்டி இதே பாதையில் ஒரு சுற்றாக நடைபெறும்.
10 கிலோமீற்றர் போட்டி பம்பலப்பிட்டி வரை சென்று மீண்டும் திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 கிலோமீற்றர் ‘Fun Run’ போட்டி கொள்ளுப்பிட்டி சந்தியைச் சுற்றி, லிபர்ட்டி சினிமா மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களைக் கடந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதான போட்டிகளுக்கான BIB இலக்கங்கள் மற்றும் டி-ஷேர்ட்கள் செப்டெம்பர் 12ஆம் திகதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை கொழும்பு 07, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வழங்கப்படவுள்ளன.
‘Fun Run’ போட்டிக்கான பதிவு மற்றும் போட்டிக் கிட் விநியோகம் செப்டெம்பர் 13ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை காலி முகத்திடலின் பாலதக்ஷ மாவத்தை நுழைவாயிலில் இடம்பெறும்.
அனைத்து போட்டியாளர்களும் தங்களது போட்டிக் கிட்களைப் பெற்றுக்கொள்ளும்போது தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்துடன், போட்டிக்கு முன்னைய நான்கு வாரங்களுக்குள் பெறப்பட்ட மருத்துவ தகுதிச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.









