(எம்.எஸ்.எம். ஸாகிர்)
கல்முனை அஹ்மட் அலி வைத்தியசாலையின் 7ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் விசேட இலவச மருத்துவ முகாம் இன்று (21) திங்கட்கிழமை வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.
தொற்றா நோய்களைத் தடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மருத்துவ முகாமில், நீரிழிவு, கொலஸ்ட்ரோல், இரத்த அழுத்தம், சிறுநீரகம், கண், உடற்பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், உடல் எடை மற்றும் உயரம் பரிசோதிக்கப்பட்டதுடன், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
கல்முனை அஹ்மட் அலி வைத்தியசாலையின் தவிசாளர் எம்.எம். இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொண்டு பயன்பெற்றனர்.
மருத்துவ முகாமில் டாக்டர் புஷ்பலதா லோகநாதன் மற்றும் டாக்டர் மயூரன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களைப் பரிசோதித்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்த வைத்தியசாலையின் தவிசாளர் எம்.எம். இஸ்ஸதீன் மற்றும் முகாமையாளர் ஏ. சாஜித் அஹமட் ஆகியோருக்கு பொதுமக்கள் தமது நன்றியைத் தெரிவித்தனர்.












