மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்மோர் பகுதியில் அமைந்துள்ள கல்கந்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக, தோட்டக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக, மவுசாக்கலை நீர்த்தேக்கத்திற்கு மேல் அமைந்துள்ள தேயிலைத் தோட்டத்தின் ஒரு பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதி மண் மற்றும் கற்களால் முற்றாக மூடப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், தோட்டத்திற்குச் செல்வதற்கு மாற்று வீதிகள் எதுவும் இல்லாததால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
ஆபத்து ஏற்படக்கூடிய வீடுகளில் வசிக்கும் குடும்பங்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு தோட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், மண்சரிவு தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்திற்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








