ஈரான் மீதான போருக்கு தெளிவான முடிவு இன்னும் ஏற்படாத நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ஒரே இடத்தில் ஒரு நாள் இடைவெளியில் உரையாற்றியுள்ளனர்.
ட்ரம்ப் உரையாற்றிய 24 மணி நேரத்துக்குப் பின்னர் அதே இடத்தில் உரையாற்றிய பெசெஷ்கியான், ஈரான் மீது போர் திணிக்கப்பட்டதாகவும், ஈரான் சரணடையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குழந்தைகளின் புகைப்படங்களையும் அவர் தனது உரையின்போது காண்பித்தார்.
அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்தாத வரை ஈரான் சரணடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஈரான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையில் கட்டார் மத்தியஸ்தத்துடன் முந்தைய நாள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. அந்தப் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாக அமைந்ததாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
எனினும், பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே அமெரிக்கா முன்னர் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், அமெரிக்காவை நம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மற்றும் மோதல் தொடர்பாக மாறுபட்ட நிலைப்பாடுகளை முன்வைத்துள்ள நிலையில், ஈரான் போர் எவ்வாறு முடிவுக்கு வரும் என்பது குறித்து இன்னும் தெளிவான முடிவு வெளியாகவில்லை.
(அல் ஜசீரா)








