கட்டாரின் தோஹா நகரில் நடைபெற்று வரும் ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பவன் ரத்நாயக்க தலைமையிலான இலங்கை ‘ஏ’ அணி இன்று (29) நடப்புச் சம்பியனான பாகிஸ்தான் ‘ஏ’ அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இத்தொடரில் இதுவரை விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று, தோல்வியடையாத அணிகளாக இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இருமுறை சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி, இன்று மூன்றாவது முறையாகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது.
மறுபுறம், 2019, 2023 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் சம்பியனான பாகிஸ்தான் அணி, நான்காவது முறையாகப் பட்டம் வெல்லும் இலக்குடன் களமிறங்கவுள்ளது.
இலங்கை ‘ஏ’ அணியின் துடுப்பாட்ட வரிசையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான லசித் குரூஸ்புள்ளே மற்றும் சினெத் ஜயவர்தன ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அரையிறுதிப் போட்டியில் பலம்வாய்ந்த இந்திய ‘ஏ’ அணிக்கு எதிராக இருவரும் இணைந்து 174 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டமை இலங்கையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இத்தொடரில் இதுவரை 260 ஓட்டங்களைக் குவித்துள்ள லசித் குரூஸ்புள்ளே, 86.66 என்ற துடுப்பாட்டச் சராசரியுடன் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஆரம்பப் போட்டிகளில் தடுமாறிய 21 வயதான சினெத் ஜயவர்தன, பயிற்றுவிப்பாளர் அஷான் பிரியஞ்சன் உள்ளிட்ட குழுவினரின் ஊக்குவிப்புடன் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 70 பந்துகளில் 105 ஓட்டங்களைக் குவித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.
இவர்களுடன் நிஷான் மதுஷ்க மற்றும் அணித்தலைவர் பவன் ரத்நாயக்க ஆகியோரும் துடுப்பாட்டத்தில் அணிக்கு வலுச்சேர்க்கின்றனர்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில், நிபுன் தனஞ்சய, வனுஜ சஹான், விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் ரவிந்து பெர்னாண்டோ ஆகிய நான்கு சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றனர்.
குழுநிலைப் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணியை 6 விக்கெட்டுகளாலும், ஹொங்கொங் அணியை 24 ஓட்டங்களாலும், பங்களாதேஷ் ‘ஏ’ அணியை 7 விக்கெட்டுகளாலும் வீழ்த்திய இலங்கை அணி, ‘ஏ’ குழுவில் முதலிடத்தைப் பிடித்தது.
தொடர்ந்து அரையிறுதியில் இந்திய ‘ஏ’ அணி நிர்ணயித்த 318 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை, 51 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
மறுபுறம், பாகிஸ்தான் ‘ஏ’ அணி குழுநிலைப் போட்டிகளில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 61 ஓட்டங்களாலும், இந்திய ‘ஏ’ அணியை 48 ஓட்டங்களாலும், நேபாளத்தை 96 ஓட்டங்களாலும் வீழ்த்தியது.
அத்துடன், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷ் ‘ஏ’ அணியை 5 விக்கெட்டுகளால் தோற்கடித்து, ஏழு தொடர்களில் ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.








