நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு இன்று (27) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, மிகவும் வறிய பிரிவைச் சேர்ந்த 381,369 குடும்பங்களுக்கும், வறிய பிரிவைச் சேர்ந்த 635,761 குடும்பங்களுக்கும் என மொத்தம் 1,017,130 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இதற்காக 12,142,055,250 ரூபா (12.14 பில்லியன் ரூபா) நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் யுத்த சூழ்நிலையால் உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால், நாட்டின் அன்றாட வாழ்க்கையில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் அவசர நிவாரணக் கொடுப்பனவை வழங்குவதற்கு கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானித்திருந்தது.
அதற்கமைய, மிகவும் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்த அஸ்வெசும கொடுப்பனவான 17,500 ரூபாவுடன் மேலதிகமாக 3,000 ரூபாவும், வறிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 10,000 ரூபாவுடன் மேலதிகமாக 2,000 ரூபாவும் இந்த மாதம் வழங்கப்படவுள்ளன.
இந்த அவசர நிவாரணக் கொடுப்பனவுக்காக அரசாங்கம் 2,415,629,000 ரூபா (2.41 பில்லியன் ரூபா) நிதியை ஒதுக்கியுள்ளது.
மேலும், இந்த மேலதிக நிவாரணத் தொகை நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.






