பதுளை மாவட்டத்தின் ஊவாபரணகம பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அலகொல்ல தோட்டத்தில் 51 புதிய வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா 29.09.2026 நடைபெற்றது.
இந்திய அரசாங்கத்தின் உதவி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்திய வீட்டுத்திட்டத்தின் நான்காம் கட்ட 10,000 வீடுகள் திட்டத்தின் கீழ் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி உயர்ஸ்தானிகரும் இதில் கலந்துகொண்டார்.
மலையக மக்களுக்குப் பாதுகாப்பான, தரமான மற்றும் கௌரவமான வீட்டு வசதிகளை வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், மண்சரிவு அபாயம் அதிகமுள்ள பகுதியில் வாழ்ந்து 13 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொண்ட 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
நீண்டகாலமாக மண்சரிவு அபாயம் காரணமாகக் கடினமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்த இக்குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வீட்டுச் சூழலையும் கௌரவமான வாழ்க்கைத்தரத்தையும் பெற்றுக்கொடுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதில் ஒரு வீட்டிற்கு இந்திய அரசாங்கத்தால் 28 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், மேலதிக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் ஒரு வீட்டிற்கு 4 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி, ஒரு வீட்டின் மொத்தப் பெறுமதி 32 இலட்சம் ரூபாவாகும்.








