சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (18) இரவு கல்முனை, நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜன் சிவராசாவின் இல்லத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது, அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனோஜனின் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அனோஜன் சிவராசாவுக்கு சவுதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து, அனோஜன் சிவராசா தொடர்பில் ஜனாதிபதியிடமும் சவுதி அரேபிய மன்னரிடமும் அவசர வேண்டுகோளை முன்வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அனோஜனின் விடுதலை தொடர்பில் சவுதி அரேபிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்போது, அனோஜனின் குடும்பத்தினர் இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகம் தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக ரிஷாட் பதியுதீனிடம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, அனோஜனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விடுதலை தொடர்பில் கொண்டுள்ள அதே உணர்வுடன் தாங்களும் முஸ்லிம் சமூகமும் இருப்பதாக ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சாணக்கியன் ராசமாணிக்கம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து குழுவாக அனோஜன் சிவராசாவின் விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் ரிஷாட் பதியுதீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அனோஜன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பில், தனக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.








