சர்வதேச விருந்தோம்பல் துறையில் முன்னணி நிறுவனமான அக்கோர் (Accor) குழுமம், தனது உலகப் புகழ்பெற்ற புல்மேன் (Pullman) ஹோட்டல் வர்த்தக நாமத்தை இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, கொழும்பில் புல்மேன் கொழும்பு டவுன்டவுன் (Pullman Colombo Downtown) மற்றும் பெந்தோட்டையில் புல்மேன் பெந்தோட்டை ரிசார்ட் & ஸ்பா (Pullman Bentota Resort & Spa) ஆகிய இரண்டு சொகுசு ஹோட்டல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனைக் குறிக்கும் வகையில், கொழும்பிலுள்ள புல்மேன் கொழும்பு டவுன்டவுன் ஹோட்டலின் Vistas Rooftop Bar பகுதியில் அண்மையில் விசேட வரவேற்பு நிகழ்வொன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், அக்கோர் தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்சு அலெக்ஸ், இலங்கையின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஹோட்டல்களின் உரிமையாளர்கள், சிரேஷ்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் வர்த்தகத் தலைநகரான கொழும்பு மற்றும் தென்னிலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலமான பெந்தோட்டை ஆகிய இரு இடங்களிலும் இந்த ஹோட்டல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, நாட்டின் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறையில் அக்கோர் குழுமத்தின் விரிவாக்கத்தில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அக்கோர் தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்சு அலெக்ஸ்,
“அக்கோர் குழுமத்தின் தெற்காசிய வளர்ச்சி உத்தியில் இலங்கை ஒரு முக்கியமான சந்தையாகும். புல்மேன் வர்த்தக நாமத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துவது, நாட்டில் எமது இருப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கையாகும்.
கொழும்பு மற்றும் பெந்தோட்டை ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்த இரண்டு ஹோட்டல்கள் ஊடாக வர்த்தக மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நவீன விருந்தோம்பல் அனுபவத்தை வழங்க எதிர்பார்க்கின்றோம்.
ஹோட்டல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமன்றி, இலங்கையின் சுற்றுலாத்துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குப் பங்களிப்பதும் நீண்டகாலக் கூட்டாண்மைகளை உருவாக்குவதுமே எமது பிரதான நோக்கமாகும்” என்றார்.
இதேவேளை, சாஃப்ட்லொஜிக் குழுமம் மற்றும் சாஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அசோக் பத்திரகே தெரிவிக்கையில்,
“அக்கோர் குழுமத்துடன் இணைந்து புல்மேன் வர்த்தக நாமத்தை இலங்கைக்கு வரவேற்பது சாஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்குப் பெருமையான தருணமாகும்.
புல்மேன் கொழும்பு டவுன்டவுன் மற்றும் புல்மேன் பெந்தோட்டை ரிசார்ட் & ஸ்பா ஆகிய இரண்டு ஹோட்டல்களும் இலங்கையின் சுற்றுலாத்துறை மீது நாம் கொண்டுள்ள நீண்டகால நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. இவை இலங்கையின் உயர்தர விருந்தோம்பல் துறைக்கு புதிய தரநிலையை ஏற்படுத்தும் என நம்புகின்றோம்” என்றார்.
புல்மேன் ஹோட்டல்கள் நவீன வடிவமைப்பு, சர்வதேச உணவு வகைகள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் சமூக ஒன்றுகூடல்களுக்கான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளன.
பணியையும் ஓய்வையும் ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இவை, சர்வதேசப் பயணிகள் பணிபுரிவதற்கும், தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கும், ஓய்வெடுப்பதற்கும் ஏற்ற சூழலை வழங்குகின்றன.
மேலும், அக்கோர் குழுமத்தின் உலகளாவிய வாடிக்கையாளர் விசுவாசத் திட்டமான ‘ALL – Accor Live Limitless’ வலையமைப்பிலும் இந்த ஹோட்டல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விசேட தள்ளுபடிகள், வெகுமதிப் புள்ளிகள், அறை மேம்படுத்தல், முன்கூட்டிய செக்-இன் மற்றும் தாமதமான செக்-அவுட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போது அக்கோர் நிறுவனம் இந்தியா மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் Raffles, Fairmont, Sofitel, Pullman, Grand Mercure, Novotel, Mercure, ibis மற்றும் ibis Styles உள்ளிட்ட பல்வேறு சர்வதேச ஹோட்டல் வர்த்தக நாமங்களின் கீழ் 75 ஹோட்டல்களை இயக்கி வருகிறது.
அத்துடன், அக்கோர் குழுமத்தின் Lifestyle ஹோட்டல் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Ennismore நிறுவனமும் இப்பிராந்தியத்தில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













